சென்னை, தூத்துக்குடி கடலில் மூழ்கும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஜெனீவா, ஆக.,11-
இந்தியாவில் அதிகரித்து வரும் கடல்மட்ட உயர்வால் சென்னை, தூத்துக்குடி, மும்பை, கொச்சி உள்பட 12 நகரங்கல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.
பருவநிலை மாற்றம்
மாறி வரும் பருவநிலையால் உலகில் வெவ்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. கோடைக்காலத்தில் மழை பெய்வதோடு, மழைக்காலத்திலும் வெயில் வாட்டி வதைக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் காரணிகளை கொண்டு காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசு குழு (IPCC) 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளும். இக்குழுவில் ஐ.நா.,வின் 195 உறுப்பு நாடுகளை சேர்ந்த பருவநிலை, காலநிலை தொடர்பான அறிஞர்கள், விஞ்ஞானிகள் இடம் பெற்றிருப்பர்.
ஐ.பி.சி.சி., அறிக்கை
இந்நிலையில் ஐ.பி.சி.சி., சார்பில் வெப்பநிலை உயர்வு, பனி உருகுதல், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், உயரும் கடல் மட்டம் ஆகிய அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில்‘‘ உலகில் புவி வெப்படைதல் வேகமாக உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும். இதை தடுக்க அனைத்து நாட்டினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் மோசமாகும்’’ என எச்சரித்துள்ளது.
நாசா ஆய்வு
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆசியாவின் நிலை குறித்து நாசா ஆராய்ந்தது. இதன் முடிவும் அறிக்கையாக வெளியாகியுள்ளது. அதில் இந்தியா குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
2006 முதல் 2018ம் ஆண்டு கணக்குப்படி உலகில் ஒவ்வொரு ஆண்டும் கடல்நீர் மட்டம் 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால் ஆசியாவில் கடல்நீர் மட்ட உயர்வு என்பது உலகின் பிற இடங்களின் சராசரி அளவை விட மிக அதிகமாக உள்ளது.
இதன்மூலம் இதற்கு முன்பு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்த கடல்மட்ட உயர்வு 2050ம் ஆண்டுக்குள் 6 அல்லது 7 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும். இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும்.
சென்னை, தூத்துக்குடி மூழ்கும்
இதனால் இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் 12 கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. அதன்படி சென்னை, தூத்துக்குடி, மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், மங்களூரு, காண்ட்லா, ஓகா, பாவ்நகர், மோர்முகோ, பாராதீப், கிதீர்பூர் நகரங்கள் 3 அடி வரை கடலில் மூழ்கும்.
இதற்கு இமயமலையில் உருகும் பனிக்கட்டிகள் தான் முக்கிய காரணமாக உள்ளன. இதன்மூலம் இந்தியாவில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 1 பில்லியன் மக்கள் வரை பாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments