நடிகை நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது; விக்னேஷ் சிவனுடன் விரைவில் டும்...டும்...டும்...
சென்னை, ஆக.11-
காதலர்களான நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
நயன்தாராவின் காதல்
தமிழ் திரையுலகின் ‛லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா. முதலில் நடிகர் சிலம்பரசனை(சிம்பு) காதலித்தார். இந்த காதல் பிரிவில் முடிந்தது. அதன்பிறகு நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலித்தனர். இந்த காதலும் கைகூடவில்லை. இதையடுத்து நயன்தாரா படங்கள் நடிப்பதில் முழுகவனம் செலுத்தினார்.
2015ல் விக்னேஷ் சிவன் இயக்கிய ‛நானும் ரவுடிதான்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் ஆங்காங்கே சேர்ந்து சுற்றினர். இதனால் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை ஒப்புகொண்டனர்.
திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில்...
கேரளா உள்பட வெளிநாடுகளுக்கு சேர்ந்தே பயணித்தனர். இதுதொடர்பான படங்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இதற்கு அடுத்த கட்டமாக திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாழ தொடங்கினர்.
இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வது எப்போது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இதுதொடர்பாக இருவரிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. சமீபத்தில் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‛நயன்தாராவை திருமணம் செய்வது எப்போது’ என்ற கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு, ‛திருமணத்துக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. இதனால் நானும், நயன்தாராவும் பணம் சேமித்து வருகிறோம். இது பூர்த்தியாவதோடு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின் திருமணம் செய்து கொள்வோம்’ என பதிலளித்தார்.
நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த மோதிரம்
இந்நிலையில் தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் கசிந்துள்ளது. இதை நயன்தாராவே கூறியுள்ளார். அதாவது, விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ‛புரோமோ’ வெளியாகியுள்ளது.
அதில் நயன்தாரா கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து தொகுப்பாளினி டிடி கேள்வி கேட்கிறார். அதற்கு நயன்தாரா தனது திருமணம் நிச்சயதார்த்த மோதிரம் என கூறுவதோடு, மற்றொரு கேள்விக்கு விக்னேஷ் சிவனிடம் அனைத்து விஷயங்களும் பிடிக்கும் என பதிலளிக்கிறார்.
இதன்மூலம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்ற தகவல் உறுதியாகிறது. இருப்பினும் நிச்சயத்தார்த்தம் குறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்னும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments