Header Ads

Header ADS

ஒரு குடும்பத்தின் மீதான கடன் ரூ.2.63 லட்சம்; தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையில் தகவல்

வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை, ஆக.,9-

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது என நிதி நிலைமை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகரான் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சி

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் நிதி அமைச்சர் பொறுப்பு பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது.
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பதவியேற்ற சில நாட்களிலேயே தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதற்கு முன்பு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க., அரசின் தவறால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

தி.மு.க., வெள்ளை அறிக்கை

மேலும் ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட் தாக்கலுக்கு(ஆகஸ்ட் 13) முன்பு தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு  சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் அரங்கில் 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

20 ஆண்டுக்கு பிறகு...

தமிழகத்தை பொறுத்தவரை 2001ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் நிதி அமைச்சராக இருந்த பொன்னையன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார். அது தெளிவில்லாமல் இருந்தது. அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பின் நான் வெளியிடுகிறேன்.

என் பெயரில் அறிக்கை வெளியிட்டாலும் இதன் பின்னணியில் பலரது உழைப்பு இருக்கிறது. அனைத்து தகவல்களையும் இடம்பெற செய்துள்ளோம். ஏதேனும் பிழை இருந்தால் அதற்கு நானே முழுபொறுப்பு.

கட்டாய செலவுக்கே கடன்

தமிழக அரசுக்கு தற்போது கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வின் முந்தைய ஆட்சியின்போது வருவாய் உபரியாக இருந்தது. தற்போது பற்றாக்குறை நிலவுகிறது. 2020-21 ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது.

2011-2016 வரையிலான அ.தி.மு.க, ஆட்சியில் ரூ.17,000 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இது 2016-2021 ஆட்சியில் ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் கட்டாய செலவுகளுக்கே கடன் வாங்கும் சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

ஒரு குடும்பத்துக்கு ரூ.2.63 லட்சம்

தமிழகத்தின் மொத்த கடன் 5.24 லட்சம் கோடியாக உள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடனாக ரூ.2.63 லட்சம் உள்ளது. மாநிலத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92 ஆயிரம் கோடியாகவும் நீடிக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த நிலை உள்ளது. உலகளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் தமிழகம் அதிகமாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

2008-2009 ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.35 சதவீதமாக இருந்தது. இது 2020-21ம் ஆண்டில் 8.7 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாக குறைந்துள்ளது.

பணமதிப்பிழப்பு, கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தில் குறைந்த அளவில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் தேவை அறிந்து தி.மு.க, செயல்படும். தமிழக நிதி நிலை குறித்து வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக தான் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேட்டியளித்து வருகிறார்.

No comments

Powered by Blogger.