ஐ.பி.எல். புதிய 2 அணிகள்; முழுவிபரம் வெளியானது
துபாய், அக்.26-
2022 ஐ.பி.எல். தொடரில் புதிதாக லக்னோ, ஆமதாபாத் அணிகள் களமிறங்க உள்ளன. இதன்மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ.12,690 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட்
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 2008ல் தொடங்கியது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பங்கேற்றன. 2011 சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது புதிதாக புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. அடுத்த சீசனில் இவ்விரு அணிகளும் விலக்கி கொள்ளப்பட்டன.
இதனால் மீண்டும் அணிகள் எண்ணிக்கை 8 ஆனது. அதன்பின் சூதாட்டம் தொடர்பான சர்ச்சையில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2016, 2017 என 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டன. அதற்கு மாற்றாக குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் துவங்கப்பட்டன. 2 சீசன் மட்டும் இருந்த அணிகள் 2018ல் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் வருகையால் கலைக்கப்பட்டன.
இதையடுத்து தற்போது வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் 8 அணிகள் தான் ஐ.பி.எல்.,லில் பங்கேற்று வருகின்றன. சமீபத்தில் முடிந்த 2021 ஐ.பி.எல்., சீசனில் ‛தல’ டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
துபாயில் ஏலம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சீசனில் புதிதாக 2 அணிகள் அறிமுகம் செய்யப்படும் என பி.சி.சி.ஐ., ஏற்கனவே அறிவித்து இருந்தது. மொத்தம் 10 அணிகள் போட்டியில் உள்ளதால் தற்போதைய 8 அணிகளின் வீரர்களும் மீண்டும் ஏலத்துக்கு வர உள்ளதாகவும் கூறியிருந்தது. இதற்கான பொது ஏலம் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில் புதிய அணிகளுக்கான அடிப்படை ஏலத்தொகை ரூ.2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க 22 நிறுவனங்கள் ரூ.10 லட்சம் கொடுத்து ‛டெண்டர்’ பெற்றன. அணிகளுக்கான ஏலம் துபாயில் நடந்தது. இதில் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, செயலர் ஜெய்ஷா, ஐ.பி.எல். கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பிரிஜேஷ் படேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆமதாபாத், லக்னோ அணிகள்
இந்த ஏலத்தில் ஆமதாபாத், லக்னோ நகரங்களின் பெயரில் புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டன. ரூ.7,090 கோடிக்கு லக்னோ அணியை கொல்கத்தாவை சேர்ந்த தொழில்அதிபர் சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் ஒப்பந்தம் செய்தது.
ரூ.5,600 கோடிக்கு ஆமதாபாத் அணியை லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட சி.வி.சி. கேபிடல் குழுமம் ஒப்பந்தம் எடுத்தது. இதன்மூலம் பி.சி.சி.ஐ.க்கு ரூ.12,690 கோடி கிடைத்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு
இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐ.பி.எல்.லில் 10 அணிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2011 சீசனில் கொச்சி, புனே அணிகளுடன் நடப்பு 8 அணிகள் இணைந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
No comments