மகனால் டிராவிட்டுக்கு பயிற்சியாளர் பதவி; கங்குலியின் ருசிகர பதில்
புதுடெல்லி, நவ.15-
பயிற்சியாளராக டிராவிட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி இருந்தார். இவரது பதவிக்காலம் டி20 உலககோப்பை போட்டியுடன் முடிவடைந்தது. புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட்டை பி.சி.சி.ஐ. நியமித்துள்ளது.
இவர் அடுத்த 2 ஆண்டுகள் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். நவம்பர் 17 ல் நியூசிலாந்துக்கு எதிராக தொடங்கும் டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் பயணிக்க உள்ளார்.
கங்குலி வெளிப்படை
இந்நிலையில் டிராவிட் நியமனத்தின் பின்னணியில் உள்ள வேடிக்கையான விஷயம் ஒன்று குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுபற்றி சார்ஜாவில் நடந்த 40வது சர்வதேச புத்தக திருவிழாவில் கங்குலி கூறியதாவது:
போனில் அழைத்த டிராவிட் மகன்
டிராவிட்டின் மகன் எனக்கு போன் செய்தார். தந்தை அதிக கண்டிப்புடன் இருக்கிறார். தேவைப்பட்டால் அவரை உங்களுடன் அழைத்து கொள்ளுங்கள் எனும் அர்த்தத்தில் இதை கூறினார்.
இது வேடிக்கையாக இருந்தாலும் டிராவிட்டுக்கு போன் செய்து தேசிய அணியுடன் இணையும் நேரம் வந்து விட்டதாக கூறினேன். தற்போது அவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
ஒன்றாக வளர்ந்தவர்கள்
நானும், டிராவிட்டும் ஒன்றாக கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள். இருவரும் ஒரேநேரத்தில் கிரிக்கெட்டை தொடங்கினோம். ஒன்றாக அதிகநேரம் செலவழித்துள்ளோம்.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு அவரை அழைக்க எளிமையாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு
பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தின் தலைவராக 2019ல் இருந்து 2021 வரை செயல்பட்டார். சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.
முன்னதாக அவர் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். இதனால் இந்திய இளம்வீரர்களின் திறமை குறித்து டிராவிட்டுக்கு நன்றாக தெரியும். இதனால் இந்தியாவின் கிரிக்கெட் இன்னும் மேம்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
😄
ReplyDelete