வீரியமிக்க கொரோனா புதிய வைரஸ் பரவல்; சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஜோகனஸ்பர்க், நவ.28-
தென்ஆப்பிரிக்காவில் ‛ஒமிக்ரான்’ எனும் புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை காட்டிலும் இது வீரியமானதாக உள்ளதோடு, வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்று வரை ஓய்ந்தபாடில்லை. தொடர்ச்சியாக உருமாறி் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆனால் அதற்குள் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
புதிய வைரஸ்
தென்ஆப்பிரிக்கா அருகே உள்ள நாடுகளில் ஒன்று போட்ஸ்வானா. இங்கு நவம்பர் 9ல் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இவரது சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டபோது அவரை வேறு விதமான கொரோனா வைரஸ் தாக்கியது தெரியவந்தது.
இதுபற்றி சுகாதார அறிஞர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் B.1.1.529 எனும் மரபணு வரிசை கொண்ட புதிய வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது.
ஒமிக்ரான்
இதுபற்றி நவ.,24ல் உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த மரபணு மாற்ற புதிய வைரசுக்கு ‛ஒமிக்ரான்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது இந்த வைரஸால் போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்ஹாங்கில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது.
டெல்டாவை விட மோசம்
கொரோனா பேரிடர் தொடங்கியது முதல் தற்போது வரை பலநூறு முறை வைரஸ் மரபணு மாற்றமடைந்துள்ளது. இருப்பினும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா எனும் 4 வகை கொரோனா வைரஸ்கள் தான் அச்சுறுத்தலானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வரிசையில் ‛ஒமிக்ரான்’ வைரசும் வீரியமிக்கதாகவும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் இணைந்துள்ளது. உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வைரசை விட இது மோசமானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
எச்சரிக்கை
இந்நிலையில் தான் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை மணி ஒன்றை அடித்துள்ளது. ‛‛ ‛ஒமிக்ரான்’ வைரஸ் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். அலட்சியம் காட்டினால் மீண்டும் பொதுமுடக்கத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகும்’’ என கூறியுள்ளது.
😷😷
ReplyDelete