இந்தியாவில் கொரோனா 3ம் அலை; ஒமிக்ரானால் வாய்ப்பு என சி.ஐ.எஸ்.ஆர்., தகவல்
புதுடெல்லி, டிச.4-
‛‛இந்தியாவில் கொரோனா 3ம் அலையை பரப்புவதற்கான அனைத்து பண்புகளையும் ஒமிக்ரான் வைரஸ் கொண்டுள்ளது’’ என வைரஸ் மரபணு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அனுராக் அகர்வால் கூறியுள்ளார்.
‛ஒமிக்ரான்’ வைரஸ் பரவல்
2019 இறுதியில் துவங்கிய கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உலக நாடுகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த வைரஸ் இந்தியா உள்பட ஏறக்குறைய 30 நாடுகளுக்கு பரவிவிட்டது.
இந்தியாவில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையி்ல ஒமிக்ரான் வைரஸால் இந்தியாவில் கொரேனா 3ம் அலை வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அனுராக் அகர்வால்
இதுபற்றி புதுடெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியின்(CSIR) மரபியல், ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிறுவனம் தான் இந்தியாவில் வைரஸ்களின் மரபணு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வகைப்படுத்துகிறது. நிறுவன இயக்குனரும், மூத்த ஆராய்ச்சியாளருமான அனுராக் அகர்வால் கூறியதாவது:
3 வகை எதிர்ப்பு சக்தி
இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரசுக்கு எதிராக 3 வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும். ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இயல்பாய் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி. இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி. மூன்றாவது கொரோனா பாதித்து குணமான பின் தடுப்பூசி செலுத்தி பெறப்படும் எதிர்ப்பு சக்தியாகும். இதை ைஹபிரிட் நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம்.
இந்தியாவில் அதிகளவிலான மக்கள் ைஹபிரிட் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். இவர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட அதிக விளைவுகளை சந்திக்க மாட்டார்கள்.
3ம் அலைக்கான பண்புகள்
நாம் கொரோனா 3ம் அலை பற்றி பேசி வருகிறோம். ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் 3ம் அலையை பரப்புவதற்கான அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது. என்னை பொறுத்தவரை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் 3ம் அலையை தடுக்கலாம்.
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் டெல்டா வைரஸை விட 6 மடங்கு வேகமாக பரவும் என்பது பொய்யான தகவல். டெல்டாவை விட 2 மடங்கு வேகமாக பரவும் தன்மையுடன் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
இந்தியாவில் குறைந்த அளவிலான மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இவர்களை தடுப்பூசி செலுத்த வைக்க வேண்டும். முன்களத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தி வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக பாதுகாக்க வேண்டும்.
தொற்று நோய்களை பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் ஆபத்து உள்ளது. இந்திய புள்ளிவிபரங்களை பார்த்தால் வயது வந்தவர்களுக்கு இணையாக குழந்தைகளும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொற்றுநோய்களால் குழந்தைகள் ஆபத்து நிலைக்கு சென்றதில்லை. இருப்பினும் சில வகை நோய்கள் குழந்தைகளின் உயிர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்...
* கொரோனா புதிய வைரஸ் கிளம்பியது எங்கிருந்து... உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன...
* ஒமிக்ரான் வைரஸ் ஏன் வீரியமானது; மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
Mutiyathu ithukku mela😷😷
ReplyDelete