ஜெயலலிதா நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி! இபிஎஸ் தான் அதிமுக பொதுச்செயலாளர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! விவசாயி டு அதிமுக பொதுச்செயலாளர் வரை! வென்றது எடப்பாடியின் ராஜதந்திரம்
சென்னை, மார்ச் 28–
சென்னை ஐகோர்ட் தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா இடத்தை எடப்பாடி பழனிசாமி பிடித்துள்ளார். அவரை பொதுச்செயலாளராக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். ஏற்கனவே காரசாரமான விவாதம் நடந்தது.
இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு விவரங்களை வெளியிட்டார் நீதிபதி குமரேஷ் பாபு. ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்தார். பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்; பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என்றார்.
இதன் மூலம் பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதை உறுதி செய்தார். ஏற்கனவே போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டு விட்டார். இருப்பினும் கோர்ட் தீர்ப்புக்காக முடிவை சொல்லாமல் இருந்தனர்.
தீர்ப்பு வந்த சில நிமிடங்களில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என அக்கட்சியின் தேர்தல் கமிஷனர்கள் நத்தம் விஸ்வநாதம், பொள்ளாச்சி ஜெயராமன் அதிகார்ப்பூர்வமாக அறிவித்தனர்.
இதன்மூலம் ஜெயலலிதா இடத்தை பழனிசாமி பிடித்துள்ளார். 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒற்றை தலைமை கிடைத்துள்ளது.
முன்பு ஜெயலலிதாவை கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்பர். அவரை குறிப்பிடும் போதெல்லாம் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றே அக்கட்சி நிர்வாகிகள் சொல்வார்கள். இப்போது பழனிசாமியை பார்த்து பலரும் நிரந்தர பொதுச்செயலாளர் என கோஷம் போட்டனர்.
சாதகமான தீர்ப்பு, பொதுச்செயலாளர் பதவி என இரட்டை குஷியில் உள்ளார் இபிஎஸ். தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் இந்த தீர்ப்பும் சேர்ந்து விட்டது.
No comments