ஓபிஎஸ் அணிக்கு அடி மேல் அடி! இபிஎஸ் தான் இனி எல்லாம்; சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு; OPS vs EPS அடுத்தது என்ன?
சென்னை, மார்ச் 28–
இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆவதை தடுக்க ஓபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்குகளில் பரபரப்பு தீர்ப்பு வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். ஏற்கனவே காரசாரமான விவாதம் நடந்தது.
இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு விவரங்களை வெளியிட்டார் நீதிபதி குமரேஷ் பாபு. ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்தார். பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்; பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என்றார்.
இதன் மூலம் பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதை ஐகோர்ட் உறுதி செய்தது. ஏற்கனவே போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டு விட்டார். இருப்பினும் கோர்ட் தீர்ப்புக்காக முடிவை சொல்லாமல் இருந்தனர்.
ஐகோர்ட் தீர்ப்பால் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆரவாரம் செய்தனர்.
ஓபிஎஸ் தரப்புக்கு இந்த தீர்ப்பு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இதுவரை கோர்ட்டுக்கு போன எந்த வழக்குகளிலும் எதிர்பார்த்த வெற்றியை ஓபிஎஸ்சால் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments