TNPSC தேர்வு ஊழல்? காரைக்குடி தேர்வு மையத்தில் 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி? வெளியானது அதிர்ச்சி தகவல்... விசாரணைக்கு ரெடியானது டிஎன்பிஎஸ்சி!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே இடத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.
எப்படியாவது அரசு வேலைக்கு போய்விட வேண்டும் என இன்றைய இளைஞர்கள் பலரும் கனவு காண்கின்றனர். இதற்காக கடுமையாக உழைக்கின்றனர். சில ஆயிரம் பதவிகளுக்கு லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.
ஆனால் டிஎன்பிஎஸ்சி நடத்தியே தேர்வில் முறைகேடு நடந்து விட்டது என இப்போது வரும் குற்றச்சாட்டுகள் இளைஞர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அப்படி என்ன நடந்தது....? விரிவாக பார்க்கலாம்.
நில அளவையர், வரைவாளர் பணிக்கு 2022 நவம்பரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது. 1,338 பணிக்கு 29 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவு வெளியாகி மார்ச் மாதம் கலந்தாய்வு துவங்கியது.
இதையடுத்து தேர்வானவர்களின் விவரம் டிஎன்பிஎஸ்சி இணையத்தில் வெளியானது. அந்த தகவலை பார்த்த மற்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் காரைக்குடியில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் 700 பேர் தேர்வாகி இருந்தனர். அதிலும் 80 சதவீதம் பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள்.
இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கொதிக்கின்றனர். இதை அரசு விசாரிக்கும் படி வலியுறுத்தி வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாசும் முறைகேடு நடந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளார். 1338 பணிகளில் 700 இடங்களை ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பிடிக்க வாய்ப்பே இல்லை. இது இயற்கைக்கு எதிராக உள்ளது. முறைகேடுக்கான வாய்ப்பு அதிகம்.
2018 ல் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. விசாரித்த போது முறைகேடு உறுதியானது. அதே முறையில் இப்போதும் முறைகேடு நடந்திருக்கும். டிஎன்பிஎஸ்சி விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் சொன்னார்.
ராமதாஸ் சொன்ன சம்பவம் என்ன தெரியுமா? 2017 ம் ஆண்டு குரூப் 4 தேர்வு நடந்தது. முடிவுகள் 2018 ல் வெளியானது. ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய பலரும் வெற்றி பெற்றனர்.
குறிப்பாக முதல் 35 இடத்தில் வந்திருந்தனர். இது நடக்கவே நடக்காது என தேர்வு எழுதிய மற்ற இளைஞர்கள் குற்றம்சாட்டினர். டிஎன்பிஎஸ்சி விசாரித்தது. அதில் முறைகேடு அம்பலமானது.
90க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். அதே பாணியில் இப்போதும் விசாரிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர். இதை விசாரித்து விட்டு விளக்கம் தருவதாக டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
No comments